இன்றைய திகதியில் எம்முடைய இளம் தாய்மார்களுக்கு சவாலாக திகழும் பல விடயங்களில், அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்துள்ள உணவை வழங்குவதும் ஒன்று. முன்னோர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலின் படி பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து உணவினை வழங்கினாலும், சந்தையில் விற்கப்படும் வணிக ரீதியிலான குழந்தைகளுக்கான உணவை அவர்களுக்கு கொடுக்கலாமா? கூடாதா? என்பதில் பல்வேறு குழப்பங்கள் இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது.
இளம் தாய்மார்கள் அனைவரும் சந்தையிலுள்ள வணிக ரீதியிலான குழந்தைகளுக்கான உணவை (கொமர்ஷல் பேபி ஃபுட்ஸை) குழந்தைகளுக்கு கொடுக்கலாமா.? என கேட்கிறார்கள். அத்துடன் இதன் காரணமாக ஏதேனும் பக்க விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமா..! என்றும் கேட்கிறார்கள்.
தாய்மார்களின் இந்த வினாவிற்கு ஒரு பிரிவினர், ‘:இதுபோன்ற நுண்ணூட்டச் சத்துணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்” என்பர். மற்றொரு பிரிவினரோ, ”இதனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை. இதனை சாப்பிட குழந்தைகள் பழக்கமாகி விட்டால்.. அவர்களால் வேறு வகையான உணவுகளை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்” என்பர்.
ஆனால் ஊட்டச்சத்து துறையினரை பொருத்தவரை இதுபோன்ற உணவு வகைகளில் ஊட்டச்சத்துகளான இரும்பு போன்ற பலவகையான விற்றமின் சத்துகள் செறிவூட்டப்பட்டிருக்கும். பயணத்தின் போதும் அல்லது பச்சிளம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நண்பர்களின் இல்லத்திற்கும் அல்லது விசேட வைபவங்களுக்கும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால்.. அங்கு இத்தகைய உணவை தயாரித்து வழங்குவது எளிதாக இருக்கும். இதனை எளிதாக எம்முடைய இல்லங்களிலேயே பத்திரப்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசம் வரை பாதுகாக்க இயலும்.
ஆனால் இதனை நாளாந்தம் தொடர்ச்சியாக காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் பச்சிளம் குழந்தைகளுக்குரிய உணவாக வழங்கினால்… குழந்தை இதன் சுவைக்கு பழக்கமாகிவிடும். அதன் பிறகு வேறு சுவை கொண்ட உணவு வகைகளை வழங்கினால், அதனை சாப்பிட மறுக்கலாம். இதனால் வேறு வகையான சுவை கொண்ட சற்று கடினமான உணவு வகைகளையும் சாப்பிட மறுக்கும். இத்தகைய உணவு பொருளின் விலை அதிகம் என்பதனாலும், இதனை அனைவராலும் பயன்படுத்த இயலாது.
அதனால் தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டும் இதனை குழந்தைகளுக்கு உணவாக பயன்படுத்த எம்மைப் போன்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் இத்தகைய உணவுடன் தாய்மார்கள் வீட்டு முறையில் தயாரிக்கும் ஊட்டச்சத்துள்ள உணவையும் வழங்குவதுதான் சரியானது. ” என்றார்.
டொக்டர் கவிதா.
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]