தமிழ் சினிமாவில் இன்றைக்கு நடிகர், நடிகைகளுக்கு கோடிக் கணக்கில் சம்பளம். ஆனால் கருப்பு வெள்ளை காலத்தில் சில ஆயிரங்கள்தான். அந்த சூழ்நிலையிலும் அதிகபட்சமாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை கே.பி.சுந்தராம்பாள். சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவரை தேடிப்போய் அவ்வையார் படத்தில் நடிக்க அழைத்தார்கள். அவர்கள் அழைப்பை தடுக்க ஒரு லட்சம் சம்பளம் கேட்டார் சுந்தராம்பாள். அவர்கள் தருகிறோம் என்றவுடன் வாக்கை மீற முடியாமல் அவ்வையார் படத்தில் நடித்தார் கே.பி.சுந்தராம்பாள்.
அவரைப்போலவே முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகர் எம்.ஆர்.ராதா. அவரும் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து தீவிரமாக நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அதில் முக்கியமான நாடகம் ரத்தக்கண்ணீர். அதனை திரைப்படமாக எடுக்க விரும்பியவவர் பாண்டிச்சேரியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த எம்.ஆர்.ராதாவை சந்தித்து “ரத்தக்கண்ணீரை சினிமாவா எடுக்கிறோம். நீங்கள்தான் நடிக்கணும்” என்றார்கள். சினிமாவில் நடிக்க விரும்பாத எம்.ஆர்.ராதா அவர்களை வெறுப்பேத்த. “நீ ரத்த கண்ணீரை எடுப்பியோ சோக கண்ணீரை எடுப்பியோ அது எனக்குத் தெரியாது. லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவியா?” என்று கேட்டிருக்கிறார். வந்தவர்களும் அதற்கென்ன தாராளமாக தருகிறோம். என்றார்கள். அவரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற ரத்தக்கண்ணீர் படத்தில் நடித்தார்.