பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது. இதில் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களைக் காணவில்லை.
ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் எமரால்டு ஸ்டார். இந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து நிக்கல் தாதுவை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 26 இந்தியர்கள் பணியாற்றினர். இந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்க தொடங்கியது. உடனே கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பப்பட்டது. ஜப்பான் கடலோர காவல் படையினருக்கு அதிகாலை 2 மணிக்கு இந்த சமிக்ஞை கிடைத்தது. உடனடியாக சம்பவ பகுதிக்கு 3 ஜப்பானிய கப்பல்கள் விரைந்தன. 3 விமானங்களும் அனுப்பப்பட்டன.
நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அதே கப்பலில் பணியாற்றிய மேலும் 11 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சரக்கு கப்பல் மூழ்கிய பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஜப்பானிய கடலோர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.