பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
இதன்போது விமானத்தில் 96 இராணுவத்தினர் மற்றும் பணியாளர்கள் பயணித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாக கூறப்பட்டது.
எவ்வாறெனினும் விபத்தில் விமானத்தில் பயணித்த 47 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 49 பேர் காயமடைந்தனர். அதேநேரம் தரையிலிருந்த மூன்று பொது மக்கள் உயிரிழந்தள்ளதுடன், நால்வர் காயமடைந்தும் உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் கறுப்பு பெட்டி உள்ளிட்ட விமான பாகங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஆயுதப்படைகளின் மேஜர் ஜெனரல் எட்கார்ட் அரேவலோ தெரிவித்தார்.
விசாரணைக் குழு சுலு செல்லும் வழியில் உள்ளது என்று அவர் ஒரு வானொலி செவ்வியில் முன்னதாக கூறினார்.
பிலிப்பைன்ஸ் விமானப்படை ஆவணங்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் சமீபத்தில் அமெரிக்க இராணுவத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சி -130 ஹெர்குலஸ் வகை விமானம் ஆகும்.