பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் போலீஸ் தரப்பில், “பிலிப்பின்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான் மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரே நாளில் 32 பேர் செவ்வாய்க்கிழமையன்று கொல்லப்பட்டனர். மேலும் இதே வழக்கில் 109 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.
டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 30-ஆம் தேதி பதவி ஏற்றது முதல் போதைப் பொருளுக்கு எதிராக தீவிரவமான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
போதை பொருள் கடத்துபவர்கள் எந்த கருணையும் காட்டாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை போலீஸார் கொடுக்கும்படியும் தொடர்ந்து வலியுறுத்து வந்தார்.
டியுடெர்ட்டின் அழுத்தத்தின் பேரில் கடந்த ஆண்டில் 5,000 பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கொல்லப்பட்டனர்.
டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.