பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவை செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா எதிர்கொள்ளவுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிரேக்கத்தின் மரியா சக்கரியாவும் செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவாவும் பங்கேற்றனர்.
கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்துடைய டென்னிஸ் போட்டியொன்றின் அரையிறுதியில் இருவரும் முதன்முறையாக முன்னேறியிருந்த நிலையில், வெற்றியை ஈட்டிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு டென்னிஸ் இரசிகர்கள் பலரினதும் கேள்வியாக இருந்தது.
இப்போட்டியின் முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பின்னர் 7 க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் பார்பொரா கிரெஜ்சிகோவா கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கிரேக்கத்தின் மரியா சக்கரியா 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதைனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் கடைசியுமான செட்டில் இருவரும் சரமாரியாக மோதிக்கொண்டனர். டை பிரேக்கர் (சமநிலை முறிப்பு) சென்ற இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றபோதிலும், இறுதியில் 9க்கு 7 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் நபராக முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவும் ஸ்லோவெனியாவின் தமாரா சிடான்செக் இருவரும் மோதிக்கொண்டனர். இப்போட்டியில் 7க்கு5, 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் முதலிரண்டு நேர் செட்களிலும் ரஷ்யாவின் அனஸ்டேஷியா வென்று இலகுவாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்கள் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், கடந்த முறையைப் போலவே இம்முறையும் சம்பியன் பட்டத்தை புதுமுக வீராங்கனையொருவர் கைப்பற்றும் என்பது உறுதி. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை (12) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.