பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்குகளில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிகளில் விளையாடவுள்ள வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
போலந்தின் இகா ஸ்வியாடெக், நடுநிலையாளர் டேரியா கசட்கினா, அமெரிக்காவின் கோக்கோ கோவ், இத்தாலியின் மார்ட்டினா ட்ரெவிசன் ஆகியோரே அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
அரை இறுதிப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.
புதன்கிழமை (01) நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் (6 – 3, 6 – 2) மிக இலகுவாக வெற்றி கொண்ட இகா ஸ்வியாடெக் அரை இறுதிக்கு முன்னேறினார்.
நடுநிலையாளர்களான ரஷ்யர்களுக்கு இடையில் நடைபெற்ற மற்றொரு கால் இறுதியில் வெரோனிக்கா கியூடர்மெட்டோவாவை சவாலுக்கு மத்தியில் (6 – 4, 7 (7) – 6 (5) என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் டேரியா கசட்கினா வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றார.
இன்று வியாழக்கிழமை (2) நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்கை கசட்கினா எதிர்த்தாடவுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டிய கோக்கோ கோவ், மார்ட்டினா ட்ரெவிசன் ஆகியோருக்கு இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.