பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜெர்மனியின் ஃபேபியனை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் 3-0 என முன்னிலை வகித்தபோது, ஃபேபியன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங் விங் ஹி வின்சென்ட் உடன் மோதுகிறார்.
மற்ற இந்திய வீரர்களான பிரணாய் முதல் சுற்றில் 21-15, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் லீ ஹைனை வீழ்த்தினார். சாய் பிரணீத் 21-13, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் கோசிட் பெட்ராடாப்பை வீழ்த்தினார். அதேவேளையில் காஷ்யப் 23-21, 18-21, 17-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் போராடி இந்தோனேஷிய நாட்டின் அந்தோனி சீனிசுகாவிடம் தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பீட்ரிஸை வீழ்த்தினார்.
2-வது சுற்றில் சிந்து, ஜப்பானின் சயாகாவை எதிர்த்து விளையாடுகிறார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-14, 11-21, 21-10 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் ஹாஜ்மார்க்கை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் பிரான்சின் பாஸ்டியன் கேர்சோடி, ஜூலியன் மாயோ ஜோடியை வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 15-21, 12-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் டன்டுவி அகமது, லிலியானா நட்சிர் ஜோடியிடம் தோல்வியடைந்தது.