பாகிஸ்தானின் சியொல்கொட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர், அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா உதவித் தொகை பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் பிரியன்த்த குமாரவின் சம்பளப் பணம் கொடுக்கப்படவுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போதே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஒரு இலட்சம் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உயிரிழந்த பிரியந்த குமார பெற்று வந்த சம்பளப் பணம் மாதம் தோறும் வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தனது உரையில் கூறியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவம் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அவரின் பிரிவால் வாடும் பிரியந்தவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக செயற்பாடுகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைந்து செயற்பட்டு வருகிறார். மேலும், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு பிரதமர் இம்ரான் கானும் பாகிஸ்தான் மக்களும் உறுதிகொண்டுள்ளனர்.
உலகில் எந்த மதமும் வன்முறையை போதிப்பதில்லை. மகாத்மா காந்தி ஒரு இந்துவால் கொல்லப்பட்டார். அன்வர் சதாத் முஸ்லிம் ஒருவரால் கொல்லப்பட்டார். சாந்தி, சமாதானத்தையே இஸ்லாம் மதம் போதிக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொருவரும் சாந்தி, சமாதானத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இறைத் தூதர் முஹம்மது நபி கூறிய வழியை பின்பற்றி நடக்க வேண்டும்.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரியந்த குமாரவின் மனைவி நிலூஷி மற்றும் அவரது இரண்டு மகன்மார்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், இஸ்லாம் மதத்துக்கான பிரதமரின் இணைப்பாளர் ஹசன் மெளலவி, இந்து மதத்துக்கான பாபு சர்மா, கத்தோலிக்க குருவானவர் சிக்ஸ்ட்டன் குருகுலசூரிய, அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த பிரியந்த குமாரவின் மனைவி நிலூஷி,
“பெளத்த மத தர்மத்தில் போதித்துள்ளதன்படி பலிவாங்குவது நல்லதல்ல. இதனையே எனது இரண்டு பிள்ளைகளுக்கு கூறி வளர்க்கிறேன். இருப்பினும் எனது கணவரை கொலை செய்த கொடூர கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஏனெனில், இது போன்ற துயரச் சம்பவம் உலகில் எங்கேயும் இடம்பெறக் கூடாது.
இந்த விவகாரம் தொடர்பாக செயற்பட்ட பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.