மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடுவா’ படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
மலையாளத் திரை உலகின் மூத்த இயக்குநரான ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடுவா’. இதில் பிரித்திவிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் அசோகன், சித்திக், சீமா, ரேணு மேத்யூஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜினு வி ஆபிரகாம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ஆர் பி பாலா வசனம் எழுதியிருக்கிறார். பிரித்திவிராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘கடுவா’ திரைப்படம் ஜூலை 7ம் திகதியன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டத்தை வெளியிட்டு, படத்தையும், பட குழுவினரையும் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, அவரது மகனும், நடிகருமான ஜீவா, நடிகர் ஆர்யா, நடிகர் விடிவி கணேஷ், தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இதன் போது பிரித்விராஜ் பேசுகையில், ” ‘கடுவா’ என்றால் புலி என்று பொருள். மலையாளத்தில் முதன் முறையாக மாஸ் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் திரைப்படம் இது. மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களுக்கும், அகில இந்திய ரசிகர்களுக்கும் கவரும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்கள் விரும்பும் வகையிலான திரைக்கதையுடன் அனைத்து மொழிகளிலும் வெளியாகும். தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டிருப்பதால். இனி ஏதேனும் ஒரு மொழியில் தயாராகும் திரைப்படங்கள். இந்தியா முழுமைக்கும் அவர்களுடைய மொழியில் வெளியாகும் நிலை உருவாகியிருக்கிறது. நடிகை சம்யுக்தா மேனனுடன் இணைந்து முதன்முறையாக நடித்திருக்கிறேன். ” என்றார்.
தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் கேரளாவில் வெளியாகி கோடி கணக்கிலான வசூலை அள்ளுவதால், முதன்முறையாக அங்கு முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடுவா’ தமிழகத்திலும், தெலுங்கு பேசும் மாநிலத்திலும் வெளியாகிறது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால்… மம்முட்டி, மோகன்லால்.. ஆகியார் நடிப்பில் மாஸ் எக்சன் என்டர்டெய்னர் திரைப்படங்கள் உருவாகி, இந்தியா முழுவதும் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.