பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை கடந்த 2010-ஐ விட கடந்தாண்டு அதிகளவில் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி 2010-ல் 1768 ஆக இருந்த எண்ணிக்கையின் அளவு 2017-ல் 4751-ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் உண்மையான எண்ணிக்கை இத விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என தொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.
கடைசியாக எடுத்த ஆய்வின் படி சாலையில் வசிப்போரின் சராசரி ஆயுட்காலம் 47 வயதாக இருப்பது தெரியவந்தது.
ஆனால் பொதுவான மக்கள் தொகையின் ஆயுட்காலம் பிரித்தானியாவில் 77 வயதாகும்.
இது குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த மார்க் பிரான் மற்றும் டேனி டோர்லிங் கூறுகையில், சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான அறிகுறியாகும்.
இதன் காரணமாக சுவாச பிரச்சனைகள், மன அழுத்தம், பதட்டம், விபத்துகள் மற்றும் அதிகமான குளிர் இறப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன என கூறியுள்ளனர்.
வீடில்லாத தனி மனிதர்கள் மட்டுமில்லாமல், குடும்பத்தின் எண்ணிக்கையும் 50,000-லிருந்து 78,000-ஆக உயர்ந்துள்ளது.
இவர்களெல்லாம் தற்காலிக இடங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளார்கள்.
லண்டனில் மட்டும் 16 – 25 வயதுடைய 225,000 பேர் வீடில்லாமல் நண்பர்கள் அல்லது உறவினர்கள் இடங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சமூக வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்க குறைக்கப்பட்டதும், வீடுகளின் விலைகள் அதிகமானதும் வீடில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சேவைகளை மேம்படுத்துதல், மலிவு வீட்டுவசதிகளை அதிகரிப்பது மற்றும் தற்போதைய வீட்டுப் பங்குகளை இன்னும் திறமையான முறையில் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை மேம்படுத்தினால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மார்க் மற்றும் டேனி கூறியுள்ளனர்.