பிரித்தானியாவில் தமிழ் முதலீட்டாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன்!
லண்டன்-கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’உடன்படிக்கையை செய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சருடன் அவரின் மூலோபாய ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் மற்றும் பிரத்தியேக செயலாளர் ராஜ துரை ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
சுமார் 100 க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த சந்திப்பில்கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், கிங்ஸ்ரன் நகரத்துடன்செய்துகொண்டுள்ள ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை பற்றி விபரித்ததுடன் இந்த உடன்படிக்கையின் ஊடாக பல பொருளாதார, சமூக மற்றும் கலாசார செயற்த்திட்டங்களை முன்னெடுக்கமுடியும் என்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த விடயத்தில் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளமுடியும் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் மூலோபாய ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் தனதுரையில், இரட்டை நகர்உடன்படிக்கை பற்றி விரிவாக எடுத்துக்கூறியதுடன் எவ்வாறான செயற்த்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுக்கலாம் என்று விளக்கியுள்ளார்.
வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜதுரை, பல்வேறுபட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்ட முன்மொழிவுகளை கொண்டுவந்திருப்பதாகவும் அவற்றைசெயற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தங்களால் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளை பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்திடம் கையளித்ததுடன் ஆர்வம் உள்ளவர்கள் இந்த முன்மொழிவுகளை பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பல முதலீட்டாளர்கள், பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த பல செயற்றத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்த இந்த சந்திப்பு மிகவும் அவசியமானதும் பயன்மிக்கதும் என்று கருத்து தெரிவித்த முதலமைச்சரும் அவரது குழுவினரும், இதே போன்று புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் இத்தகைய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் பற்றி விளக்கம் அளித்த சம்மேளனமுக்கியஸ்தர் சதாசிவம் மங்களேஸ்வரன், கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தசம்மேளனம் கடந்த 6 வருடங்களில் பிரித்தானியாவில் தமிழ் மக்களின் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளிலும் இதேபோன்று வர்த்தக சம்மேளனங்களை உருவாக்கிஉலகளாவிய ரீதிரியில் தமிழ் மக்களின் வர்த்தக மற்றும் பொருளாதார செயற்ப்பாடுகள்வலுவூட்டப்படும் பொருட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர்வேண்டுகோள் விடுத்ததுடன் இதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சுமார் 10,000 வரையான பதிவு செய்யப்பட்ட தமிழ் வர்த்தக செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவை பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து தம்மை பதிவு செய்வதன் மூலம் பல நன்மைகளை அடைய முடியும் என்றும் திறமையான ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செய்றாப்பாட்டை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.