பிரிட்டிஸ் கொலம்பியாவில் கன மழை : பாரிய வெள்ளம்
பிரிட்டிஸ் கொலம்பியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் பெய்த கன மழையின் காரணமாக அங்கு பாரிய வெள்ளநிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பல குடியிருப்புக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் அதிகரித்தமையினால் பெரும்பாலான பகுதிகளில் பாதைகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதுடன், பல பாலங்களும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகள் உள்ள உயர்ந்த பகுதியை நோக்கி சென்றுள்ளனர். எனவே அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது சில பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. எனினும் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை. அதேவேளை குறித்த பகுதியின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்ய முடியாமல் உள்ளதாக அந்த பிராந்திய நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெள்ளம் தொடர்ந்து வடிந்து செல்லுமானால் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ள அச்சம் நீங்கும். எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.