அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கடந்த 13 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணமானதுடன் அங்கு அரசாங்கத்தின் கொள்கைவகுப்பாளர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
அதுமாத்திரமன்றி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இடையில் வியாழக்கிழமை (25) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.
அப்பதிவில் சுமந்திரனுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் தாரிக் அஹமட், இச்சந்திப்பின்போது மனித உரிமைகள், போரின் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்தல் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி சிறுபான்மையினத்தவரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் பேசியதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே தற்போது மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]