கண்கொண்டு பார்க்க முடியாது
ஒரு பறவை
இரத்தம் சொட்டச் சொட்ட
நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்
பிய்த்து வீசப்பட்டிருப்பதை
முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்
பின்னர் ஆண்குறிகளால்
பின்னர் துப்பாக்கிகளால்
அழுகிய பிணங்களைப்
புணரும் வீரமிகு படைகள்
வேறெதைச் செய்வர்?
யாருமற்ற கடற்கரையில்
ஈனக்குரல் எழுப்புகையில்
ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை
வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்?
யாராலும் எழுத முடியாது
நேரிட்ட நிர்க்கதியை
சிந்திய கண்ணீரை
உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை
பிய்த்தெறியப்பட்ட கதையை
இறுதிக்குரலை
நிராயுதயபாணிகளை வேட்டையாடும்
கொலையாளிகளிடம்
‘அது நானில்லை’
என்று சொன்னாய்
யாரை அவர்கள் விட்டு வைத்தனர்?
அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே
இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.
இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்
தீபச்செல்வன்
மன்னம்பேரி: 1971இல் கதிர்காமம் என்ற இடத்தில் இலங்கைப் படையினரால்; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிங்களப் பெண் போராளி.
வற்றாப்பளையம்மன்: முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கோயில்.
நன்றி: குமுதம்