வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பான கூட்டம் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது கூட்டத்தினை ஒழுங்கமைத்தவர்கள் இது பிரமிட் வியாபாரம் இல்லை, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குளோபல் நிறுவனம் என தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸார் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழையும் இவ் வியாபாரம் தொடர்பாக தெளிவுபடுத்துமாறும் பொலிஸார் கேட்டனர்.
எங்களிடம் நிறுவனம் பதிவு செய்யப்பட்டமைக்கான மூலப்பிரதி இல்லை. அதன் பிரதியே உள்ளது. மற்றும் எமது வியாபாரம் முதலில் அவர் ஒரு பொருளை கொள்வனவு செய்ய வேண்டும். முதல் வாரத்தில் 6 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இரண்டாவது வாரத்தில் 8 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். மூன்றாவது வாரத்தில் 3 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகளவு சம்பாதிக்கலாம் என தெரிவித்தனர்.
பொலிஸார் அவர்களிடமிருந்து வாக்குமூலத்தினை பெற்றுக் கொண்டதுடன் நாளை வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறும் கூட்டத்தினை நிறுத்துமாறும் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் 20 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.