இலங்கை வந்துள்ள மியன்மார் அகதிகள் குறித்தும், இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடும் தொடர்பு படுத்தி இனவிரோத கருத்துக்களை பிரபா கணேசன் தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது. அத்தோடு நின்று விடாமல் தமிழ சகோதர இனத்துடன் இலங்கை முஸ்லிம்களையும் கோர்த்துவிட்டு குளிரÊகாய முனைவது அண்டைய நாடுகளதும் மஹிந்த தரப்பினரதும் கைக்கூலியாக செயற்படுகிறார் என எண்ணத்தோன்றுகின்றது.
மியன்மார் அகதிகள் குறித்த இவரது கருத்துக்கு அரசும் ஐ.நா சர்வதேச அகதிகள் பேரவையும் சரியான சட்டரீதியான கருத்தினை முன்வைத்துள்ளதுடன் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே அகதிகள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு அரசுகளின் முகவராக முன்னாள் அரசுக்கு களம் அமைத்துக்கொடுக்க எத்தனிக்கும் இனவாத அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை மியன்மார் அகதிகள் விடயத்தில் தற்போதைய அரசு கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது மனோகணேசன் அறியாத விடயமுமல்ல.
புகலிடக்கோரிக்கையாளர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்ற கோட்பாடு ஒன்று இருக்குமானால் இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தினால் கடுமையான இழப்புக்களை சந்தித்த வடகிழக்கு தமிழ் சகோதர இனத்தை சார்ந்த அனைவரும் புலிப்பாய்ங்கரவாதிகளாக அல்லது ஏதோ ஒரு தமிழ் ஆயுதக்குழுவினைச்சார்ந்தவராக மேற்கும் ஐரோப்பாவும் கருதி புகலிடக்கோரிக்கையை நிராகரித்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் மனித நேயம்கொண்டு அகதி அந்தஸ்த்து வழங்கி காலப்போக்கில் பிரஜா உரிமையுடன் பலர் தாம் வாழும் நாடுகளில் அரசியல் தீர்மான சக்திகளாக வாக்குரிமையும் பெற்றுள்ளதனை காணமுடிகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய நாடுகளை கருவறுக்க முஸ்லிம்களுக்கெதிரான உலகளாவிய பரப்புரையை மேற்கொள்ள மேற்க்கினால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு என்றும் இஸ்லாத்திற்கும் அதற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்றும இஸ்லாமிய அறிஜர்கள் சர்வதேசத்திலும் இலங்கையிலும் ஒருமித்து அறிவிப்புச்செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரை சாடியுள்ள நிலையில் இது குறித்து சிறுபிள்ளை அறிவுகூட இல்லாமல் முன்னாள் அரசின் வங்குரோத்து அரசியல் வாதியாக கருத்து தெரிவிப்பது புத்தி சுவாதீனமான செயற்பாடல்ல. இலங்கை தமிழ் அகதிகள் இந்திய மண்ணில் தஞ்சம் புகுந்தவேளை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ராஜிவ் காந்தி படுகொலைச்சம்பவத்துடன் தமிழ் அகதிகளை முடிச்சுப்போட முனைவது போன்றே ரொஹின்யா அகதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இலங்கை முஸ்லீம் சமூகம் என கதையாடல்கள் அமைகின்றது.
கடந்த கால அரசின் போது சர்வதேசத்தின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச விசாரணைக்குப்பதிலாக உள்ளக விசாரணைப்பொறிமுறை ஒன்றினை கோரி இலங்கை அரசு கோரிக்கை முன்வைத்தபோது தென்னாபிரிக்க, சியாராலியோன் நல்லிணக்க பொறிமுறைக்கமைய அதனை முஸ்லீம் சமூகம் விரும்பியோ விரும்பாமலோ ஆதரவினை தெரிவித்த்திருந்தது.
இக்காலப்பகுதியில் மஹிந்த அரசுடன் அமைச்சுப்பதவிக்காக ஒட்டிக்கொண்டிருந்ததுடன் சர்வதேச விசாரணைக்கெதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவினை வழங்கியதுடன் அரசு சார்பான செயற்பாட்டாளராக களமிறங்கியதும் மூடிமறைக்கும் விடயமல்ல. மனிதாபிமான ரீதியில் உயிர் பாதுகாப்புக்கோரி தஞ்சம் அடையும் அகதிகள் விடயத்தில் அல்லது வாழ்வியல் போராட்டத்தில் பொருளாதார நலன்களுக்காக தஞ்சம் அடைந்தவர்கள் மீது மனித நேயமற்ற வக்கிர புத்தியுடன் சகோதரர் பிரபா கணேசன் கருத்துக்களை முன்வைக்க முனைவது தாம் சார்ந்த இந்திய மலையக தமிழர் விடயத்தில் இலங்கை அரசு வாக்குரிமை வழங்கி இந்நாட்டில் சமாந்தர பிரஜைகளாக வாழ வழிவகுக்கச்செய்தமை பிழையானது என கூற முற்படுவது போன்றதாகும் என விளங்கி கொள்ள வேண்டும். மலையக மக்களது பிரஜா உரிமை நியாயமானது என கருத்து செல்ல முற்படுவதாயின் எவ்வித பிரஜா உரிமையும் கோராமல் வெளிநாடு ஒன்றுக்கு தஞ்சமைடைய சென்ற ரோஹிங்கிய அகதிகளை வழிமறித்து சர்வதேச நியதிகளுக்கமைய அகதிகளாக குறிப்பிட்ட காலம் ஐ.நா சபையின் செலவில் இலங்கையில் தங்க வைப்பது என்பது எவ்விதத்திலும் சட்ட முரணானது அல்ல என்பதனை பிரபா கணேசன் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அத்தோடு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் பயங்கரவாதத்துடன் எவ்வித தொடர்புகளுமற்றவர்கள் என்பதனை இந்திய உளவுப்பிரிவு, ஐ.நா அகதிகள் பேரவையும் உறுதிப்படுத்திய பின்னரே அரசினால் தற்காலிக புகலிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதனை பிரபா கணேசன் விளங்கி கொள்ள வேண்டும். யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்க சூழ்நிலையில் இத்தகைய நச்சுக்கருத்துக்களை பரப்பி இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வங்குரோத்து அரசியல் வாதிகள் புதிய சட்ட நியதிகளுக்கமைய தண்டிக்கப்படவேண்டும்.