புத்தகங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றிவிடுகின்றன, சிறந்த நண்பனாக, சிறந்த வழிகாட்டியாக புத்தகங்கள் மாறிவிடுகின்றன.
ஒரு நல்ல தந்தையைப் போல, ஒரு நல்ல தாயைப் போல புத்தகங்கள் வழிகளை செப்பனிடுகின்றன.
நூலகத்திற்குச் செல்லு, நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும் என்று எழுத்தாளர் ஜெயக்காந்தன் கூறுகிறார்.
இந்த சிந்தனை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போது நூலகத்திற்குச் செல்லாதவர்கள் எல்லோரும் முட்டாள்களா என்ற விவாதம் துவங்கியது.
தீவிர இலக்கியத் தளத்தில் வாசிப்பு மற்றும் புத்தகங்கள் தொடர்பில் இலக்கியவாதிகள் பலவாறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
சராசரி வாசிப்பு முதல் தேர்ந்த வாசிப்பு வரையிலான எவ்வேறு நிலைப்பட்ட வாசிப்புக்கள் நமது மத்தியில் உள்ளன, ஈழச் சூழலில்கூட ஈழ விடுதலையையும் ஈழப் போராளிகளையும் மிக மோசமாக சித்திரிக்கும் எழுத்துக்களும் வெளிவருகின்றன.
அத்துடன், புனைவுலகம், இலட்சிய மனப்பாங்கு, அழகியலால் மேம்படுதல், ஆக்கவுணர்வைப் பெறுதல் என்ற தன்மைகள் கொண்ட வாசிப்புக்களின் மத்தியில் உளச்சிக்கலை உருவாக்கிவிடும் வாசிப்புத்தளமும் போக்கும் உள்ளடக்கமும் உண்டடென்பதையும் மறுத்துவிட இயலாது.
நெல்லும் கல்லும் கலந்திருப்பதைப் போலத்தான் புத்தக உலகமும். வாசிப்பு என்பது வாசகரையும் பொறுத்தது, எப்படியாகிலும் வாசிப்பு என்பது பண்படுத்தலையும் செழுமைபடுத்தலையும் வழிப்படுத்தலையும் பலனாக தர வேண்டும்.
உலக புத்தக தினம்
அண்மையில் உலகப் புத்தக தினம் அனுஸ்டிக்கப்பட்டது. எழுத்தாளர்கள் தாம் எழுதிய புத்தகங்களையும் தாம் எழுதியவற்றில் தமக்குப் பிடித்த புத்தகங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்.
வாசகர்கள் தமக்குப் பிடித்த எழுத்தாளரின் புத்தகங்களையும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களையும் பகிர்ந்தார்கள். உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்கிறது.
அதைப் போலவே ஐ.நாவின் யுனஸ்கோ புத்தகங்களுக்காயும் ஒரு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை. அவை பல மனித ஆளுமைகளை உருவாக்கியுள்ளன. அவை பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் ஆகச் சிறந்த தலைவர்களை உருவாக்குவதில்கூட புத்தகங்களுக்குப் பெரிய பங்களிப்பு இருக்கிறது. நமது கல்வியால் உருவாக்க முடியாத தலைவர்களை சில புத்தகங்கள்தான் உருவாக்கியிருக்கிறன என்பது கவனம் கொள்ளத்தக்கது.
உலகப் பு உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் எனப்படும் யுனஸ்கோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
“அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்” என்று பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனஸ்கோ கூறுகிறது.
புத்தகங்கள் உருவாக்கிய ஆளுமைகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலக அரங்கில் கவனம் பெற வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பாடசாலை கல்வியை இடைவிட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஆனால் ஈழ மண்ணில் இருந்த எந்தக் கல்வி மேதைகளாலும் அடைய முடியாத இடத்தை அவரடைந்தார்.
ஈழ நிலத்தில் படித்த எந்த மேதையும் ஈழத் தமிழர்களுக்கு தலைவனாக முடியாத நிலையில் எமது விடுதலைப் போராட்டத்தை வலுவும் வலிமையும் மிக்கதாகவும் மதிப்பும் மாண்பும் மிக்கதாகவும் முன்னெடுத்தார்.
அதற்கு அவரிடம் இருந்த நுண் சிந்தனையும் வாசிப்பும்தான் அடிப்படையாக இருந்தது. கடற்புறா, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நூல்கள் உட்பட பல நூல்களை அவர் படித்திருந்தார் என்று கூறக் கண்டிருக்கிறோம்.
தற்போது உலக அரங்கில் முதன்நிலை பணக்காரராக அறியப்படுகின்றார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருக்கும் எலான் மஸ்கின் வாழ்க்கை பல போராட்டங்களைக் கொண்டது.
அவரது சிறு வயதில் பல போராட்டங்களைக் கண்டபோதும் புத்தகங்கள்மீதான வாசிப்பு அவரை தனித்துவமான வழியில் பயணப்பட வைத்தது.
தனது பன்னிரண்டாவது வயதிலேயே அறிவியல்சார் வாசிப்பின் வழியாக கணினி காணொளி விளையாட்டுக்களின் சமிக்ஞைகள் மற்றும் குறியீடுகளை உருவாக்கி அதிலிருந்து வருவாயைப் பெற்றுக்கொண்டார்.
தனிமையில் வாழ்வைக் கழித்த எலானுக்கு புத்தகங்கள் துணையிருந்தன. பின் வந்த விண்வெளி ஏவுகணை வெற்றிகள் உள்ளிடங்களலாக வாழ்வு முழுவதுக்குமான போராட்டத்தையும் வெற்றிக்கான வழிகளையும் புத்தகங்களில் இருந்து, தான் கொண்ட வாசிப்பில் இருந்துதான் எலான் பெற்றுக்கொண்டிருப்பதாக பின்வந்த காலத்தில் கூறியிருக்கிறார்.
தமிழ் ஈழத்தில் புத்தகங்கள்
இனவழிப்புப் போர் உக்கிரமாக நடந்த பகுதியொன்றுக்கு அண்மையில் சென்றிருந்தேன், உருக்குலையாமல் மிகவும் பாதுகாப்பான உறைகளாலான அந்தப் புத்தகங்களின் முதல் பக்கங்களில் மாவீரர் படிப்பகம் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இன்னமும் அழியாமல் அந்தப் புத்தகங்களில் இருக்குமத் அந்த முத்திரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராளிகள் இயக்கம் அறிவின் மீதும் புத்தகங்களின் மீதும் வைத்திருந்த பற்றுக்கும் நேசிப்புக்கும் சாட்சியாக இருக்கிறது.
அன்றைக்கு வடக்கு கிழக்கின் பெரும்பான்மையாக பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அன்றைய தமிழீழம் எங்கும் இத்தகைய மாவீரர் படிப்பகங்கள் நிறுவப்பட்டன.
அதாவது தமிழீழத்தின் அத்தனை பிரதேசங்களிலும் இந்தப் படிப்பகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு வாசிப்புக்காக பல்வேறு தரப்பட்ட நூல்களையும் மாவீரர் படிப்பக தலைமைச் செயலகம் வழங்கியிருந்தது.
வாசிப்பையும் புத்தகங்களையும் புலிகளைப் போல நேசித்த இயக்கம் வேறில்லை. அன்றைக்கு புலிகளை கொச்சைப்படுத்திய, புலிகளை எதிர்த்த புத்தகங்களையும் பத்திரிகைகளையும்கூட தமிழீழத்திற்கு அனுமதித்திருந்தார்கள்.
அந்தளவில் அன்றைய தமிழீழக் கருத்துச் சுதந்திரம் முழுமை பெற்றிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசு தமிழர் தேசம் மீது பாரிய இனவழிப்புப் போரை துவங்கிய வேளை எங்கள் வீடுகளை மாத்திரமல்ல, எங்கள் ஆலயங்களை மாத்திரமல்ல, எங்கள் பள்ளிக்கூடங்களை மாத்திரமல்ல, எங்கள் பிரதேசங்கள் தோறுமிருந்த மாவீரர் படிப்பகங்களையும்கூட குண்டுகளை வீசி அழித்திருந்தது.
90ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட யாழ் நூலகத்தை அழித்த அதே கரங்கள் எங்கள் பிரதேசங்கள்தோறுமிருந்த நூலகங்களையும் அழித்திருக்கிறது என்பதே துயரமான வரலாறாகும்.
புத்தகங்களைக் கொடுத்த தலைவர்
முதன் முதலில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அன்றைய தமிழீழ நிழல் அரசிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற வேளை, “ஈழத்து இலக்கிய வரலாறு” என என்னிடம் இருந்த புத்தகம் ஒன்றை வெடிகுண்டைப் போல கண்டுபிடித்த இராணுவத்தினர், பிரபாகரன் ஆயுதங்களைத்தானே குடுப்பார்… என்ன உனக்குப் புத்தகங்களை கொடுத்துள்ளார் என்று கேட்டிருந்தனர்.
என்னுடைய பயங்கரவாதி நாவலுக்கு அந்த கேள்விதான் சுழியாகியிருந்தது. போர் கவிந்த மண்ணிலிருந்து படித்து பல்கலைக்கழகம் சென்ற எம்மை நோக்கி கேட்ட அந்தக் கேள்வியும் ஒரு புத்தகத்தின் வழியாக பின்வந்த காலத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளதும் எங்கள் போராட்ட வழியின் மேன்மையாகும்.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் அந்த இராணுவச் சிப்பாய்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். அன்றைய காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் பல சிறுவர் இல்லங்கள் இயங்கின.
அங்கெல்லாம் சிறந்த நூலகங்கள் இருந்தன. அங்கு படித்த பிள்ளைகள் சிறந்த வாசிப்பினால் தங்கள் ஆளுமையை விருத்தி செய்தார்கள். ஆம்… அந்தச் சிறுவர்களின் கைகளில் தலைவர் பிரபாகரன் புத்தகங்களைத்தான் கொடுத்திருந்தார்.
அறிவது பொத்தகசாலை என்றொரு கடை அன்று தமிழீழ நகரங்கள் முழுவதும் இருந்தன.மக்கள் குவிந்து, நிறைந்து புத்தகங்களை அள்ளிச் சென்ற, பத்திரிகைகளை அள்ளிச் சென்ற அந்த பண்பாடுதான் அறிவின்மீதும் வாசிப்பின்மீதும் புத்தகங்களின்மீதும் போராளிகள் கட்டியெழுப்பிய தனித்துவமான பயணத்தின் சாட்சிய நினைவுகளாகும்.