வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கு பின்னரான மாற்றங்கள் குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை உச்சரித்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்ட காலம் மாறி தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் அரசாங்கத்தின் மீதான விரக்தியில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை அதிகளவு உச்சரித்து வருகின்றனர்.இந்த நிலைமை காலப்போக்கில் படிப்படியாக மாறிவிடும்.
கடந்த மாதம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் இலங்கையை விட்டு சென்ற காரணத்தினாலே பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரமடைந்துள்ளனர்.இலங்கைக்கு சுதந்திரம் தந்தது அவர்கள் அல்ல. எங்களை விட்டு சென்றமையினால் பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரம் பெற்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு விரக்தியில் சிங்கள மக்கள் தெரிவித்த கருத்தும் அண்மையில் பிரபலமானது.
இந்த நிலையில், நெருக்கடி தான் வரலாற்றினை மாற்றும். இந்த மாற்றம் நல்ல மாற்றத்தினை அடைவதற்கான ஏற்பாடுகளில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். இதற்கு உள்ளக சூழலும்,வெளிப்புற சூழலும் தகுந்தாற்போல அமைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.