கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்களை இனி வரும் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தி கேட்டவுடன் நான் நிலைகுலைந்து போனேன்.
ஆனால் அதற்கு காரணம் அவரிடம் இருந்த பக்தியா அல்லது அவரது ஆளுமையா என்று சொல்லத் தெரியவில்லை. 16 வருடங்கள் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியிருக்கின்றேன்.
மிகுந்த வேதனையை தந்த மரணங்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்படும்போது நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
அதில் ஒன்றுதான், இந்த நாட்டிலே அமைதி அல்லது கிழக்கு மாகாணத்திலே இரத்தம் சிந்தாத நிலைமை ஏற்பட வேண்டுமாக இருந்தால் பொட்டு அம்மான் அவர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மரணிக்கும் வரை அது சாத்தியமில்லை என்பதில் நாங்கள் உறுதியாகவிருந்தோம்.
அது நடக்கும் போது, பழைய தலைவர், நண்பர்கள் என்ற அடிப்படையில் மிகுந்த வேதனையாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.