வத்தளை புனித ஆனா கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் டீ. மஞ்சு என்பவர் பிரபல அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய சகா என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவருக்கு பிரபல அமைச்சர்கள் இருவரின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய (23) துப்பாக்கிச் சூட்டின் போது டீ. மஞ்சுவுடன் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடல்லகே மஞ்சு எனும் பெயரால் அறிமுகமாகியுள்ள டீ. மஞ்சு என்பவர் பேலியகொட நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சாமிக சந்தருவன் மீதான துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்திலும் பிரதான சந்தேகநபராவார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர, பாரியளவிலான ஹெரோயின் வியாபாரம், கப்பம் எடுத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக டீ.மஞ்சு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த பாதாள உலக தலைவர் பியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமானவர். இவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு நெருக்கமாக அரசியலில் ஈடுபட்டு உதவி புரிந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஒரு அமைச்சரின் அரசியல் பிரச்சார நடவடிக்கை மற்றும் காரியாலய நடவடிக்கை என்பவற்றை பொறுப்பாக நின்று நடாத்தியவர் இந்த டீ. மஞ்சு என்பதற்கு ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த பாதாள உலக தலைவரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுபட்டிருக்கும் போது பிரபல அமைச்சர் ஒருவர் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர். லதீப் இற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருப்பதாக நேற்றுக் காலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வேனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வேன் வத்தளை புனித ஆனா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது வேனிலிருந்து விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் மேற்கொண்டபோது டீ.மஞ்சு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.