அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.
20 ஆவது திருத்தத்தை பாதுகாக்க பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ பல்வேறு மாற்று வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறார்.
19 ஆவது திருத்தத்தின் பிரதான ஜனநாயக இலட்சினங்கள் 21 ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு கம்யூனிச கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் சவால்களை வெற்றிக்கொள்ளும் வகையில் சுயாதீன 10 அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, புதிய கூட்டணி அடிப்படையில் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வுகாண பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
பொருளாதார நெருக்கடிக்கும்,சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்து முயற்சிக்கிறார்.
இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் வரப்பிரசாதத்தை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரதான ஜனநாயக இலட்சினங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்படாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் முழுமையான அவதானம் செலுத்தி வருகிறார்கள்.
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பு திருத்தத்தை சூழ்ச்சியினால் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக நிறைவேற்றினால் அது மேலும் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.