சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி இயந்திர படகில் 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இந்திய கடல் பகுதியில் ஓலகுடா கடற்பகுதிக்கு அருகில் 4 கடல் மைல் தெலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கி தோட்டா பறிமுதல்
அப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்துப் படகு அவ்வழியே வந்து, மீனவர்களின் படகை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். அத்துடன் வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பிச்சை என்ற மீனவரின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அந்த படகில் இருந்து ஒரு துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டு, அது மண்டபம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடி படகுக்குள் வந்த கடலோர காவல்படை வீரர், தங்களை தடி, இரும்பு கம்பியால் அடித்து காயப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஜான்சன் என்ற மீனவரின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, மீனவர்கள் அளித்தபுகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலோர காவல்படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டிருந்தால், சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்திருக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.