மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ளார். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, தாக்கலாகும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அதேபோல் நடப்பு அரசின் பதவிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான கடைசி பட்ஜெட் இதுவாகும். நடுநிலையான, வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, சுகாதரத்துறை வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பெரும் நிறுவன வரி 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும்.
இதன்மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும். அதேசமயம், வருமான வரி உச்சவரம்பைக் குறைக்க வேண்டுமென்று தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.
அதை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது. தேசிய சமூக நலத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அது இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.200 முதல் ரூ.300 வரையே வழங்கப்படுகிறது. அதை ரூ.1000-மாக உயர்த்த வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை” என்று கூறியுள்ளார்.