புத்த பெருமானின் ஐனனம், ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிலைகளை நினைவுகூரும் புனித வெசாக் பண்டிகையானது உலகவாழ் பௌத்த மக்களினால் பக்தியோடு கொண்டாடப்படும் உன்னத பண்டிகையாகும்.
பௌத்த பாரம்பரியத்தால் வளப்படுத்தப்பட்ட பெருமைமிக்க கலாசாரத்திற்கு உரிமை கோரும் இலங்கையர் அனைவரும், உலகம் முழுவதும் பரந்து வாழும் பௌத்தர்களுடன் இணைந்து இப்புனித பண்டிகையை பக்தியோடு கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் வெசாக் பண்டிகையை உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் கொண்டாட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆகவே புத்தரின் போதனைகளுக்கு அமைவாக, நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து, புத்தபெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான வழிபாட்டு முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
அத்துடன் இதுபோன்ற சவாலான காலத்தில் புத்த பெருமானின் போதனைகளில் காணப்படும் பெருமதிப்பு மிக்க உள்ளார்ந்த தத்துவங்களை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் தர்மத்தின் வழியிலான வாழ்க்கையை வாழ முடியும்.
உலக பொக்கிஷமான பௌத்த சமயம் என்பது பௌத்தர்களுக்கானது மட்டுமல்ல, உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகும். பௌத்த சித்தாந்தத்தின் வாயிலாக நாம் பெற்றக்கொண்ட ஒழுக்கமானது, வரலாறு முழுவதும் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பாரிய உதவியாக அமைந்ததோடு இலங்கை எனும் தேசமாக உலகத்தின் முன்பாக பெருமையோடு நிற்கவும் உதவியது.
அரச வெசாக் திருநாள் வைபவத்தை இவ்வருடம் யாழ்ப்பாணம் நயினா தீவில் அமைந்துள்ள நாகதீப ரஜமஹா விஹாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும், தற்போது நிலவிவரும் கொவிட் தொற்று அதற்கு இடையூறாக விளங்கிவருகின்றது. ஆயினும் திருநாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவதற்கு இந்நோய் ஒர் தடையாக அமையுமென எண்ணவில்லை. கொள்கை ரீதியாக வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து வீட்டிலிருந்த வண்ணம் இந்த உன்னத திருநாளை கொண்டாடி அகமகிழுமாறு இலங்கைவாழ் பௌத்தர்களிடம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவலக அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற வகையிலும், கொவிட் தொற்று உலகிலிருந்து முற்றிலுமாக நீங்கி, அனைத்து மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்.
உலக வாழ் மக்கள் அனைவருக்கும் இரக்கமும், கருணையும் மிகுந்த இனிய வெசாக் தின நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்