பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளேன். அவரால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
நாட்டின் தற்போதைய அவலநிலைமையினை கண்டு பெரும் மனவேதனையடைகிறேன். சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து புதியஅரசாங்கத்தை ஸ்தாபிப்பது சகல தரப்பினரதும் பிரதான கோரிக்கையாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மற்றும் புதிய அரசாங்கம் ஸ்தாபிப்பு குறித்து துறைசார் நிபுணர்கள்,சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.
தற்போதைய அரசாங்கத்தை கலைத்து சகல தரப்பினரையும் ஒன்றினைத்த புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அனைத்து தரப்பினரதும் பிரதான கோரிக்கையாகவுள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஊடாக தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறும்.
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து அனைத்து தரப்பினருடனும் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த அரசாங்கத்தை கலைத்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.வாகனத்திற்கு உதிரிபாகங்களை இணைப்பதை போன்று ஒவ்வொரு தரப்பில் இருந்து ஒருசிலரை எடுத்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதால் எவ்வித சாதகமான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது.புதிய அரசாங்கத்தின் ஊடாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.மக்கள் பக்கம் இருந்து யோசனைகளை முன்வைத்துள்ளோம்.அரசாங்கத்தின் பக்கமிருந்து செயற்படவில்லை.
அரச சேவை ,தனியார் துறை,விவசாயிகள்,தொழிலாளிகள்,தோட்ட தொழிலாளிகள் உட்பட உழைக்கும் வர்க்கத்தினர் சகலரும் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
நாட்டின் தற்போதைய அவலநிலைமையை கண்டு பெரும் மனவேதனையடைகிறேன்.விவசாயிகளின் பாதிப்பு முழு பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளேன்.அவரின் செயற்பாடுகளை நன்கு அறிவேன் தற்போதைய அரசாங்கத்தினால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.சர்வக்கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அவசியமானது என்றார்.