பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரிட்டன் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேற்று (16-12-2017) நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடல்கோ மற்றும் பிரான்ஸுக்கான இந்திய தூதர் வினய் மோகன் கெளத்ரா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
இங்குள்ள நுழைவு வாயிலில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவு வாயிலுக்கு மற்றுமொரு சிறப்பு உண்டு. என்னவென்றால், போரில் பங்குகொண்டு உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களையும் அது தாங்கி நிற்பதுதான். இங்குதான் நேற்று (16-12-2017) மாலை பிரான்ஸ் நேரப்படி 6 மணியளவில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரான்ஸ் மெட்ரோபோல் அமைப்பும் இந்தியத் தூதரகமும் இணைந்து போரில் உயிர் நீத்த பிரிட்டன் மற்றும் இந்திய வீரர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகப்போரில் இந்தியர்களின் பங்கு:
1914-ம் ஆண்டு ஜூன் 28-ம் நாள் ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்சிஸ் ஃபெர்டினாண்ட் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, செர்பிய நாட்டைச் சேர்ந்த காவ்ரீலோ பிரின்சிப் என்பவர் அவரைச் சுட்டுக்கொன்றார். இதனால் உலக நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்தன. இப்படி ஆரம்பித்ததுதான் முதல் உலகப்போர். 1914-ம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் போர் 1918-ம் ஆண்டுவரை நடைபெற்றது. 1914 ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ஜெர்மனிக்கு எதிராகப் போர் பிரகடனத்தை அறிவித்தது பிரிட்டன். ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளை எதிர்கொள்ள அதிக அளவிலான ராணுவ வீரர்கள் பிரிட்டனுக்குத் தேவைப்பட்டனர். அப்போது இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்ததால் இந்தியாவில் இருந்து ராணுவ வீரர்களை உதவிக்கு அழைத்தது.
இந்த அழைப்பால் இந்தியப் படையின் முதல் அணி, ஆறு வாரம் கழித்து மார்சில் துறைமுகத்துக்குச் சென்றது. அதன்பின் முதல் உலகப்போரில் பங்குகொள்ள அதிக அளவிலான இந்தியர்கள், பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வீரர்களுடன் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் லட்சக்கணக்கான டன் அளவு கொண்ட உணவு மற்றும் ஆயுதங்கள் கொண்டுசெல்லப்பட்டன. சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வீரர்கள், முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர். இவர்கள் பிரான்ஸில் வெர்டன், மார்ன், ஸோம் போன்ற பகுதிகளிலும், பெல்ஜியத்தில் இப்ரஸிலும், ஆப்ரிக்காவில் டாஸ்கா, கிளிமஞ்சாரோ போன்ற பகுதிகளிலும், மத்திய கிழக்கில் துருக்கி, ஈராக் ஆகிய இடங்களிலும் நடந்த போர்களில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டு போரிட்டனர். இப்படிப் பல்வேறு இடங்களிலும் அந்தப் போரில் கலந்துகொண்டு போரிட்ட நம் இந்திய வீரர்கள் பலர் அதில் மடிந்துபோயினர்… எண்ணிக்கையற்ற அளவில் காணாமல் போயினர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் வெற்றிபெற்றது.
போர் முடிந்தபின்பு, ‘விக்டோரியா கிராஸ்’ எனப்படும் வீரச் செயலுக்கான 11 விருதுகள் உள்பட 9,000-க்கும் அதிகமான விருதுகள் இந்திய வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். இதன் காரணத்தால், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற இடத்தில் வீரர்களுக்காக நினைவிடம் உருவாக்கப்பட்டது. அத்துடன், இங்கிருக்கும் நுழைவாயிலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டது.
அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இதேநாளில் நினைவஞ்சலி இங்கு செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த (16-12-2017) இந்த அஞ்சலியில் பாரிஸின் 8-15 வட்டத்தின் மேயர்கள், புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் பிரெஞ்சு ராணுவத்தின் முன்னாள் ராணுவ வீரர் சண்முகநாதன் செரந்தியா, பிரான்ஸ் கூட்டமைப்பில் உள்ள சங்கங்கள் மற்றும் தமிழரான பிரான்ஸ் விமானப் படையின் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்பின் தலைவர் செரந்தியா சிங்காரவேலன், பாரிஸ் நகரப் பொதுமக்கள் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு மெழுகுவத்தி ஏற்றியும், கொடிபிடித்தும் நினைவஞ்சலி செலுத்தினர். நினைவஞ்சலியின்போது இருநாட்டுக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், இருநாட்டுத் தேசிய கீதங்களும் ஒலிக்கவிடப்பட்டன. அனைவரும் வீரர்களின் தியாகத்தைப் போற்றினர்.