சினிமாவில் நடித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்றும் கூறியிருக்கிறார்.
கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழகத்தில் வாய்ப்பு தேடினார். அப்போது பாலசந்தர் என்ற தமிழர் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பொருளும், புகழும் சேர்த்தார். இவரால் பல தமிழ் இளைஞர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தமிழ் படங்களில் பறிபோனது.
தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.