சமூகஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், கோவை ஈஷா மையம் குறித்து தொடர்ந்து தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இதனால் ஈஷாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதாகவும் கூறி ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பியூஷ் மானுஷ் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஈஷாவின் நதிகள் மீட்பு நெடும்பயணத்தையும், மரம் வளர்ப்புத் திட்டத்தையும் விமர்சித்து சமூக வளைதளங்களில் வீடியோ வெளியிடுவதாகவும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டத் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும். ஈஷாவின் நற்பெயரைச் சிதைக்கும் ஒரே நோக்கத்தோடு பியூஷ் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஈஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈஷாவின் செயல்பாடுகள் குறித்தும் சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மனுஷ் உள்நோக்கத்தோடு அவதூறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருவதாக முறையிட்டார். இதனையடுத்து, ஈஷா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.