கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனியாக திருக்கோவில் அமைந்திருகிறது. அதில் வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளத்தை, உருவாக்கியதே பரசுராமர்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
தல வரலாறு
ஜமத்கனி முனிவர் – ரேணுகாதேவி தம்பதியின் 5 மகன்களில், கடைசியாக பிறந்தவர், பரசுராமர். இவர் மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரம் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானிடம் இருந்து ‘பரசு’ என்னும் கோடரியை பெற்றதால், ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு நாள் ரேணுகாதேவி, தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். ஆற்றில் தண்ணீர் எடுத்தபோது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. அந்த நிழல் உருவத்தைப் பார்த்து ஒரு கணம் சலனப்பட்டார், ரேணுகாதேவி. இந்தக் காட்சி, ஆசிரமத்தில் தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.
ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, “உன் தாயின் தலையை துண்டித்து விடு” என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், எந்த எதிர் கேள்வியும் கேட்காமல், தாயின் தலையை வெட்டினார்.
தன் ஆணையை எதிர்ப்பின்றி நிறைவேற்றிய மகனுக்கு, ஏதாவது வரம் அளிக்க நினைத்தார், ஜமதக்னி முனிவர். பரசுராமரிடம் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பரசுராமர், “தந்தையே, உங்கள் ஆணைப்படி தங்கள் மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். ஆகையால் என் தாயை உயிர்ப்பித்து தாருங்கள்” என்று வேண்டினார். ஜமத்கனி முனிவரும், எந்த மறுப்பும் சொல்லாமல், அவரது ஆசையை நிறைவேற்றினார்.
பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். தாயாரும் உயிர் நீத்தார். இதனை அறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாக சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.
தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இந்த தொடர் கொலை, அவருக்கு துன்பத்தை தந்தது. அதிலிருந்து விடுபட விரும்பியவர், இனி எவருடனும் போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்தினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தார்.
அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்கு சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார். அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிதுர் தர்ப்பணம் செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மாவுக்கு உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.
சிவபெருமானை வழிபட்ட அந்த இடம்தான் திருவல்லம் திருக்கோவிலாக தற்போது மாறியிருக்கிறது. இங்கு பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்கு தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஆலய அமைப்பு
கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அமைவிடம்
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரில் இருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, திருவல்லம் திருத்தலம்.
பெயர்க்காரணம்
திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர்.