இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை விரைந்து முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டத் திருத்த யோசனைகளையும் இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளும் தாமதமின்றி கூடிய விரைவில் ஆரம்பிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேற்று சிறப்புக் கூட்டமொன்றுக்கு மைத்திரி அழைப்பு விடுத்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உறுமய, ஈழமக்கள் ஜனநாயக முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தேர்தல் காலமென்பதால் ஏனைய கட்சித் தலைவர்களால் மேற்படி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல்போனது என்று மைத்திரிக்கு அறிவிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயவீர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஆணைக்குழுக்களின் அதிகாரிகள் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டனர். அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.