பிணைமுறி மோசடி அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் யார் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டி ருந்தால் அது தொடர்பில் ஆராய திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமையச் செயற்படுவோம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் விடுத்துள்ள சிறப்பு ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ளதாவது,
–
விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதைப்போன்று 9.2 பில்லியன் ரூபாவை பேப்பச்சுவல் நிறுவனத்திடம் இருந்து மீளப்பெற்றுவிட முடியும். அதற்காக ஆணைக்குழு முன்வைத்துள்ள செயற்பாட்டை பின்பற்றுவோம். முழுப் பணத்தையும் அரசு பெற முடியும். அரசுக்கு இழப்பு ஏற்படாது.
ஊழல் மோசடிகளைத் தடுக்கவே நாங்கள் பதவிக்கு வந்தோம். கட்சி நிறம் மற்றும் எவ்வாறான பதவிகள் என்றாலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்து சில காலத்தில் பிணைமுறி தொடர்பான சர்ச்சை எழுந்தது. அதனை நாங்கள் கீழே போட்டு மறைக்கவில்லை.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதும் முன்னர் எந்த அரசும் அது தொடர்பில் விசாரிக்கவில்லை. நாங்கள் மூன்று முறை இது தொடர்பில் விசாரித்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் பலமுறை இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.