பிணைமுறி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற இணையத்தளமூடாக அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். பிணைமுறி ஊழலில் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பை நானே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வேன்.
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை அமைச்சர் சமரசிங்க மன்றில் வெளிப்படுத்தினார்.
“நாளை (இன்று) பிணைமுறி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அறிக்கையை சகல தரப்பினரும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் மொழி பெயர்ப்புகளுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அரச தலைவரின் நிலைப்பாடாக இருந்தது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்திலும் இது தொடர்பாக அரச தலைவர் எம்முடன் கலந்துரையாடினார். மத்திய வங்கி பிணைமுறி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை ஆராய தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகளை கையாள்வதில் தான் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கின்றேன். எனது முழுமையான தலையீட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் அரச தலைவர் குறிப்பிட்டார் என்று அமைச்சர் சமரசிங்க கூறினார்.