கம்பேக் மேட்ச்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதுவும் வலுவானவனிடம்தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டே இருந்த ஒருவன் திருப்பி அடித்து வெற்றி கொண்ட கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. சினிமா, கிரிக்கெட் மட்டுமல்ல கபடியிலும் அப்படிப்பட்ட கம்பேக் கதைகள் உண்டு. நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி இடையிலான போட்டி கம்பேக் மேட்ச்களுக்கு ஒரு சிறிய உதாரணம்.
புரோ கபடியை பொறுத்தவரை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி எப்போதுமே வலுவான அணிகளில் ஒன்று. ஐபிஎல்லில் ஆடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஜெராக்ஸ் தான் தபாங் டெல்லி. அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் கடந்த சீசன்களில் விளையாடவில்லை. கடைசி இரண்டு இடத்தில் வந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு விளையாடும் அணியாகத்தான் இருந்தது. டெல்லியோடு மேட்ச்சா? ஐந்து புள்ளிகள் நிச்சயம்ப்பா என்ற மனநிலையில் தான் கடந்த சீசன்களில் எதிர் அணிகளும் விளையாடின.
இதுவரை 57 போட்டிகளில் ஆடியுள்ள தபாங் டெல்லி அணி ஜெயித்தது வெறும் 15ல் தான். அதுவும் மூன்றாவது சீசனில் 14 போட்டிகளில் ஆடி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வென்றது. இதோ இந்த சீசனில் 12 அணிகள் கோப்பையைக் கைப்பற்ற போட்டி போடுகின்றன. ஜெயிப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு முதல் போட்டியே தபாங் டெல்லி அணியுடன்தான். “ஒன்சைடு மேட்ச்சா இருக்குமேப்பா “, “சுவாரஸ்யமே இருக்காதே” என கமென்ட்டுகளில் … மீம்களில்… கலாய்த்து தள்ளினார்கள் நெட்டிசன்கள். தபாங் அணியும் கடைசியாக ஜெய்ப்பூர் அணியுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெறவே இல்லை. ஜெயிப்பூர் அணியில் உடும்புப்பிடி நாயகன் மன்ஜீத் சில்லர் இருந்தார். அவர் தான் அந்த அணியின் கேப்டனும் கூட. அவரைத் தவிர ஜஸ்விர் சிங், செல்வமணி உள்ளிட்ட திறமையான வீரர்களும் இருந்தனர். தபாங் டெல்லி அணியில் பிரபலமான இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஈரான் வீரர் மீரஜ் ஷேயிக்தான் அந்த அணிக்கு கேப்டன்.
ஹைதரபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேட்ச் தொடங்கியது. ஆரம்பத்திலியே போட்டுத் தாக்கியது ஜெய்ப்பூர். 0 – 2 என முதல் இரண்டு நிமிடங்களில் பின்தங்கினாலும் அதன்பின்னர் சுதாரித்து ஒரு சாம்பியன் அணி எப்படி ஆடுமோ அப்படியொரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுதியது ஜெய்ப்பூர். மன்ஜீத் சில்லர் ரெய்டுக்கு வரும்போதெல்லாம் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். செல்வமணி ஜெய்ப்பூருக்கு புள்ளிகள் சேர்த்தார். 0-2 என நிலையில் இருந்து தடாலென 7 – 4 என்றானது ஸ்கோர். அந்த பதற்றத்தில் மேலும் தவறுகளை செய்தனர் டெல்லி வீரர்கள். எதிரணியின் பதற்றத்தைச் சாதகமாக்கிக் கொண்ட ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஜஸ்விர் சிங் அக்ரசிவ் மனப்பான்மையோடு ரெய்டுக்குச் சென்று தபாங் டெல்லி அணியை துடைத்துப் போட்டார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆல் அவுட் ஆனது டெல்லி.
14 – 4 என ஜெயிப்பூர் எளிதாக முன்னிலை பெற்றது. அப்போது Do or die எனச் சொல்லப்படும் கட்டாயம் புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய ரெய்டில் மாற்றுவீரராக களமிறங்கிய ஈரான் வீரர் அபோல்ஃபாசில் மக்சொட்லு அற்புதமாக ஒரு புள்ளியை எடுத்தார். எதிரணியின் வலுவான ரெய்டரான ஜஸ்விர் சிங்கை வெளியேற்றும் பணியையும் அபோல்ஃபாசில் முடித்தார். முதல் பாதி முடிவில் ஸ்கோர் 16 – 10 என்ற நிலையில் இருந்தது. ஆறு புள்ளிகள் முன்னிலையோடு ஜெய்ப்பூர் இரண்டாவது பாதிக்கு ரெடியானது. ஐந்து நிமிட ஓய்வுக்கு பிறகு அம்பியில் இருந்து அந்நியனாக மாறியது டெல்லி அணி. ரெய்டிலும் சரி, டேக்கிலிலும் சரி ஜெய்ப்பூரை பிழிந்து எடுத்தது.
இரண்டாவது பாதி தொடங்கியதுமே ஜெய்ப்பூரை ஆல் அவுட் செய்தனர் டெல்லி வீரர்கள். இதனால் இரண்டு புள்ளிகள் கூடுதலாக கிடைத்தது. 14 – 7 என்ற ஸ்கோர் பின்னர் 16 – 13 என்றானது. அதன் பின்னர் 18 – 17 என்றானது. அப்போது டூ ஆர் டை ரெய்டுக்குச் சென்ற ஜஸ்விர் சிங் அவுட் ஆனார். ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 18 – 18 என புள்ளிகள் இருந்தபோது ஜெயிப்பூர் அணி பதற்றத்தில் பிடியை முற்றிலுமாக தளர்த்தியது. மன்ஜீத் சில்லரையும், ஜஸ்விரையும் குறிவைத்து வீழ்த்தியது தபாங் டெல்லி.
இரண்டாவது பாதியில் ஈரான் கேப்டன் மீராஜ் ஷேயிக் சிறப்பாக ஆடினார். நெகிழ்வுத் தன்மை மிக்க தனது உடலை பயன்படுத்தி ரெய்டில் பல புள்ளிகளைக் குவித்தார் மீரஜ். ஜெயிப்பூர் மீண்டும் ஆல்அவுட் ஆனது. அப்போது ஸ்கோர் 21 – 27. இப்போது தபாங் அணி ஆறு புள்ளிகள் முன்நிலையில் இருந்தது. அதன்பின்னர் ஜெய்ப்பூர் அணி சுதாரிக்கத் தொடங்கினாலும் அது காலம் கடந்த முயற்சியாக மட்டுமே இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 30 – 26 என்ற கணக்கில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது தபாங் டெல்லி. எதிரணியில் வலுவானவனை முதலில் வீழ்த்து, எளிதில் வெற்றி வசப்படும் எனும் யுக்தியைத்தான் பயன்படுத்தியது டெல்லி அணி.
முதல் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தது ஜெய்ப்பூர் ரசிக கூடாரம். இந்த சீசனில் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து ஆடுவோம். சாம்பியன் ஆக வேண்டும் என எங்களுக்கும் ஆசை இருக்கிறது என போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சொன்னார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பென்டிகிரி. டெல்லி அணி இந்த சீசனில் இன்னும் எந்தெந்த அணிகளுக்கு எல்லாம் சஸ்பென்ஸ் வைக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.