கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும் மருந்துகளும் கலக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ‘ஜனபலய கொழம்பட்ட’ (மக்கள் பலம் கொழும்பை நோக்கி) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் விஷம் கலந்திருந்ததாக, வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி வர்ணகுலசூரிய அலெக்ஸ் நிஷாந்த பெனாண்டோவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த பால் பக்கெட்டுக்களில் விசம் கலக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.