பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிதியத் தணிக்கை அமைச்சர் Gérald Darmanin இற்கு, அரசாங்கம் ஆதரவாக உள்ளதாகவும், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், மற்றும், பிரதமர் எதுவார் பிலிப் ஆகியோர், தங்களின் ஆதரவையும், அவர் மீதான நம்பிக்கையையும் மீள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்தத் தகவலை அரசாங்கத்தின் பேசவல்லவரான (porte-parole du gouvernement) Benjamin Griveaux ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர், பொதுமக்கள் நிதியத் தணிக்கை அமைச்சர் தொடர்ந்தும் தனது பதவியில் நீடிப்பாரா என்ற கேள்விக்குப பதிலளிக்கையிலேயே, அரசாங்க ஊடகத் தொடர்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் தங்களது ஆதரவையும் நம்பிக்கையையும் வழக்கின் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தமையால், ஏனைய அமைச்சர்களும் சகோதரத்துவ அடிப்படையில் ஆதரவை வழங்குவார்கள் எனவும், பேசவல்லவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இனிமேலான, அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டுகளிற்கும், வழக்குகளிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.