மி டூ விவகாரத்தால் தினம் ஒரு திரைப்பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய பிரபலம் இயக்குநர் சுசி கணேசன்.
திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 போன்ற படங்களை இயக்கி உள்ள இவர் மீது கவிஞரும், குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அம்பலப்படுத்தி உள்ளார்.
மலையாள நடிகை ஒருவர், காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சமயத்தில் தனது பேஸ்புக்கில், இயக்குநர் ஒருவர் காரில் வைத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார் லீனா. தற்போது அதே பதிவை மீண்டும் பகிர்ந்து, அந்த இயக்குநர் சுசி கணேசன் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
லீனா மணிமேகலை பேஸ்புக்கில் அன்று பதிவிட்ட பதிவு…
2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது.
பாலியல் தொல்லை : “வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்” என்று சொன்ன “இயக்குநரை” நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன்.
சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது.