பாலின திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.9,739 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.
இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 1 தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பாலின திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,31,700 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,21,961 கோடியாக இருந்தது. பட்ஜெட் தாக்கலின்போது பியூஷ் கோயல் பேசுகையில், “பெண்கள் தலைமையிலான முன்னேற்றமே இந்த அரசின் மந்திரம். ஊட்டச்சத்து திட்டங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தேசிய ஊட்டசத்து திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.3,400 கோடி நிதி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல அங்கன்வாடி சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு ரு.29,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி உயர்வின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற சில முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், “முத்ரா கடன் திட்டம் 75 விழுக்காடு பெண்களுக்கு பயன்பட்டுள்ளது. 26 வார கால மகப்பேறு கால விடுமுறை, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (மகப்பேறு கால பயன் திட்டங்கள்) ஆகியவை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களாகும்” என்று பியூஷ் கோயல் தனது உரையில் தெரிவித்துள்ளார். இவை மட்டுமின்றி தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம்-அஜீவிகா (ரூ.4,512), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (ரூ.20,000 கோடி), பிரதம அமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (ரூ.2,327 கோடி) ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் சற்று அதிகரித்துள்ளது.