கடினமாக போராடி பான் இந்திய நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் நடிகர் அருண் விஜய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், அருள் தாஸ், பிருந்தா சாரதி, சண்முகராஜன், மை. பா. நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் நடித்த சீயான் விக்ரமின் உடல் மொழி, உச்சரிப்பு, தோற்றப் பொலிவு போன்றவை அருண் விஜய் கதாபாத்திரத்தின் ஊடாக வெளிப்படுவதால் இயக்குநர் பாலாவிடம் புதிய சரக்கு இல்லை என்பதையும், அவர் தன்னுடைய வழக்கமான வக்ர வன்முறையை மீண்டும் படம் பிடித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரவேற்பை பெற்று வருகிறது.