பனாமா ஆவணங்கள் கசிந்து 18 மாதங்கள் ஆன நிலையில், மற்றொரு முக்கியமான நிதித்தரவுகள் கசியவிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தகவல்களை கசியவிட்டிருப்பது ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ (Süddeutsche Zeitung) என்ற ஜெர்மன் செய்தித்தாள்.
இந்த தகவல்கள், புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. 96 புதிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் பிபிசியும் பங்குபெற்றது. இந்தியாவில் இந்த விசாரணையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் பங்குபெற்றது.
தற்போது கசியவிடப்பட்டிருக்கும் 1.34 கோடி ஆவணங்கள், ‘பாரடைஸ்’ ஆவணங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகப் பிரமுகர்கள் பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள ‘பாரடைஸ்’ ஆவணங்களில் இரு இந்தியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரவீந்திர கிஷோர் சின்ஹா ஆகிய இருவரின் பெயருடன், புகைப்படத்தையும் offshoreleaks.icij.org என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரசும் இந்த இரு அரசியல் தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது
ஜெயந்த் சின்ஹாவின் பிரமாண பத்திரம்
ஜெயந்த் சின்ஹா 2014ஆம் ஆண்டில் ஹஜாரிபாக் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் ‘ஒமிட்யார்’ நெட்வர்க்கின் இந்திய நிர்வாக இயக்குநராக செயல்பட்டார்.’ஒமிட்யார்’ நெட்வர்க்கின் அமெரிக்க நிறுவனம், ‘டிலைட் டிசைன்’ (D.Light Design) ஒரு முதலீட்டு நிறுவனம். இது கரீபியன் கடலில் அமைந்திருக்கும் கைமன் தீவுகளில் அமைந்துள்ளது.
வெளிநாட்டு சட்ட உதவி மையமான ‘ஆப்பிள்பி’ நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அவர் ‘ஒமிட்யார்’ நெட்வர்க்கின் இந்திய நிர்வாக இயக்குநராக பணிபுரிந்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 2014 தேர்தலில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, ஜெயந்த் சின்ஹா இது பற்றிய தகவல்களை குறிப்பிடவில்லை. அதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபோதும் இந்த தகவல்களை இந்திய அரசுக்கும் தெரிவிக்கவில்லை.எப்படி நடக்கிறது வரி ஏய்ப்பு?
டிலைட் டிசைன் நிறுவனம் 2006ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது. அதேநேரத்தில் கைமன் தீவிலும் இதே பெயரில் ஒரு துணை நிறுவனமும் தொடங்கப்பட்டது. ஒமிட்யார் நெட்வொர்க்கில் 2009 செப்டம்பரில் இணைந்த சின்ஹா, 2013 டிசம்பரில் நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டார்.
டிலைட் டிசைனில் ஒமிட்யார் நெட்வர்க் முதலீடு செய்ததுடன், கைமன் தீவில் உள்ள அதன் துணை நிறுவனத்தின் மூலமாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளரிடம் இருந்து 30 லட்சம் டாலர் கடன் வாங்கியது.
இந்த கடனுக்கான ஒப்பந்தம் 2012 டிசம்பர் 31ஆம் தேதியன்று உருவானதாக ஆப்பிள்பியின் ஆவணங்கள் கூறுகின்றன. அதாவது, சின்ஹா நிறுவனத்தில் பணியில் இருந்தபோது நடைபெற்ற வணிக நடவடிக்கை இது என்பது தெளிவாகிறது.
கைமன் ஐலேண்ட்
2016 அக்டோபர் 26ஆம் நாளன்று ஜெயந்த் சின்ஹா பிரதமர் அலுவலகத்திற்கு கொடுத்த தகவல்கள் அந்த அலுவலகத்தின் வலைதளத்தில் இருக்கிறது.
”2009 முதல் 2013ஆம் ஆண்டுக்குள் ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனம் செய்திருக்கும் சில முதலீடுகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். உறுதிச்சான்று அளித்தவரின் ஏதாவது பயன் கிடைத்திருந்தாலும், அது மதிப்பிட இயலாத ஒன்று”
ஜெயந்த் சின்ஹா வழங்கிய இந்த தகவல்கள் 2014, மார்ச் 24ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தின் உறுதிச்சான்று பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. ஜெயந்த் சின்ஹா வழங்கிய தகவல்கள் மக்களவை செயலகத்திலும் உள்ளது.
ஆப்பிள்பியின் ஒரு ஆவணத்தின்படி, 2012ஆம் ஆண்டில் கைமன் தீவில் உள்ள டிலைட் டிசைன் துணை நிறுவனம் மூலம் இரு தவணைகளாக கடன் தொகை பெறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஜெயந்த் சின்ஹா உட்பட ஆறு பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இந்தக் கடனை வழங்கியது சர்வதேச வர்த்தக மைக்ரோஃபோன் கூட்டமைப்பு II பி.வி. இது, நெதர்லாந்த் இன்கார்ப்பரேட்டட் பிரைவெட் லிமிடெட் லயபிலிடி நிறுவனம் ஆகும்2012 டிசம்பர் 31ஆம் நாளன்று இந்த கடனை சட்டப்பூர்வமாக்கியது ஆப்பிள்பி. இந்த சட்டப்பூர்வ அம்சத்திற்காக, ஆப்பிள்பி அதே நாளன்று 5775.39 டாலருக்கு ரசீது ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
டிலைட் டிசைன், தரமான நுகர்வோர் பொருட்களை தயாரிப்பதோடு வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
‘இ பே’ (eBay) நிறுவனர் பெர்ரி ஒமிட்யார் மற்றும் அவரது மனைவி பாம் இணைந்து 2004ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள். இதில் ஒமிட்யார் நெட்வொர்க்கின் முதலீடும் உள்ளது.
இந்தியாவின் க்விக்கர், அக்ஷரா அறக்கட்டளை, அனுதீப் அறக்கட்டளை, ஆஸ்பயரிங் மைண்ட்ஸ் மற்றும் ஹெல்த் கார்ட் ஆகிய நிறுவனங்களும் ஒமிட்யார் நெட்வர்க்குடன் இணைந்து செயல்படுபவை.
ஜெயந்த் சின்ஹா என்ன சொல்கிறார்?
“ஒமிட்யார் நெட்வர்க்கில் நிர்வாக அதிகாரியாக 2009 செப்டம்பரில் நான் இணைந்தேன். 2013 டிசம்பர் மாதம் பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஒமிட்யார் நெட்வர்க் 2010இல் டிலைட் டிசைனில் முதலீடு செய்ததற்கு நான் பொறுப்பு. உலகின் முன்னணி சூரிய சக்தி உற்பத்தி நிறுவனங்களில் டிலைட் டிசைனும் ஒன்று”.
“அதன்பிறகு 2014 நவம்பர் மாதம்வரை டிலைட் டிசைன் நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவின் நானும் இடம்பெற்றிருந்தேன். 2013 டிசம்பர் வரை ஒமிட்யார் நெட்வொர்க்கின் தரப்பில் பிரதிநிதியாக இருந்தேன்”.
“2014 ஜனவரி முதல் நவம்பர் வரை, அந்தக்குழுவில் நான் சுயாதீன இயக்குநராக இருந்தேன். 2014 நவம்பர் மாதத்தில் அமைச்சராக பொறுப்பேற்றதும், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தற்போது இந்த நிறுவனங்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை”.
“டிலைட் டிசைன் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது நான் எந்தவித ஆதாயத்தையும் பெறவில்லை. 2014 ஜனவரி முதல் நவம்பர் வரை, ஆலோசனைகள் சொல்வதற்காக எனக்கு ஊதியமும், நிறுவனத்தின் பங்குகளும் வழங்கப்பட்டன”.
“இவை அனைத்தையும் நான் என்னுடைய வருமான வரி கணக்கு சமர்ப்பிக்கும்போது குறிப்பிட்டிருக்கிறேன். அதோடு இவை அனைத்தையும் எனது சில பிரமாண பத்திரங்களிலும் நான் குறிப்பிட்டிருக்கிறேன்”.
“நான் ஒமிட்யார் நெட்வர்க்கில் இருந்தபோது, நிறுவனம் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது, அதில் டிலைட் டிசைனும் ஒன்று. நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற முறையில் நிதி தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியது என் கடமை”.
ஒமிட்யார் தரப்பின் விளக்கம்
”ஜெயந்த் சின்ஹா, நிறுவனத்தின் கூட்டாளி, நிர்வாக அதிகாரி மற்றும் ஆலோசகராக பங்களித்திருக்கிறார். 2010 ஜனவரி முதல் 2013 டிசம்பர் 31வரை நிறுவனத்துடன் இணைந்திருந்தார்” என ஒமிட்யார் நெட்வர்க், இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் நடவடிக்கைகள், முதலீடுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை நாங்கள் வெளியிடமுடியாது. எங்கள் நிறுவனத்துடன் டிலைட் டிசைன் கொண்டிருந்த தொடர்பு பற்றி அந்த நிறுவனத்திடம் இருந்து தகவல் பெற்றுக் கொள்ளலாம்.”
பாஜக எம்.பி ரவீந்த்ர கிஷோர் சின்ஹா
இந்தியன் எக்ஸ்பிரசின்படி, 2014ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்த்ர கிஷோர் சின்ஹா, பணக்கார எம்.பியாக கருதப்படுகிறார்.
முன்னாள் பத்திரிகையாளரான ரவீந்திர கிஷோர் சின்ஹா, எஸ்.ஐ.எஸ் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை உருவாக்கினார். ரவீந்திர கிஷோர் சின்ஹா தலைமையிலான இந்த குழுமத்திற்கு வெளிநாட்டில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன.
மால்டா பதிவு அலுவலகத்தின் பதிவுகளின்படி, எஸ்.ஐ.எஸ் ஆசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (SAPHL) 2008 ஆம் ஆண்டில் மால்டாவில் எஸ்.ஐ.எஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
ரவீந்திர கிஷோர் சின்ஹா இந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தாலும், அவரது மனைவி ரீதா கிஷோர் சின்ஹா இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.
பிரிட்டிஷ் வர்ஜின் தீவிலும் எஸ்.ஐ.எச்.எல் நிறுவனம் உள்ளது என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதன் 3,999,999 பங்குகள் SAPHL நிறுவனத்தில் உள்ளது, ரவீந்திர கிஷோர் சின்ஹாவின் பெயரில் ஒரு பங்கு உள்ளது.
மால்டா பதிவு அலுவலகத்தின் 2008 அக்டோபர் 13ஆம் நாளின் ஆவணங்களின்படி, SAPHLஇன் 1499 சாதாரண பங்குகள் தலா ஒரு யூரோ மதிப்புக்கு மால்டாவின் பி.சி.எல் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் உள்ள இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் லிமிடெடுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டேவிட் மரினெல்லியின் சார்பாக ஒரு சாதாரண பங்கு, ரவீந்திர கிஷோர் சின்ஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. SIHL நிறுவனத்தில் சின்ஹா, அவரது மனைவி ரீதா கிஷோர், மகன் ரிதுராஜ் கிஷோர் சின்ஹா ஆகியோர் இயக்குநர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவீந்திர கிஷோர் சின்ஹா மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தனது பிரமாண பத்திரத்திலோ அல்லது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட பிறகோ, SAPHL இல் தனது மனைவிக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடவில்லை.
ரவீந்த்ர கிஷோர் சின்ஹாவின் விளக்கம் – இந்தியன் எக்ஸ்பிரசின் கூற்று
”இவை 100% எஸ்.ஐ.எஸ்-இன் துணைநிறுவனங்கள், இவற்றில் நானும் ஒரு பங்குதாரர். இந்த நிறுவனங்களிடம் எனக்கு வேறு எந்த தொடர்போ, ஆதாயமோ ஏதுமில்லை. இந்த நிறுவனங்களின் இயக்குநராக நான் இருப்பது உண்மைதான்.
இந்த நாடுகளின் சட்டங்களின்படி, எந்தவொரு நிறுவனத்திற்கும் இரண்டு பங்குதாரர்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த நிறுவனங்களில் எனக்கு தலா ஒரு பங்கு இருக்கிறது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் செபிக்கு கொடுத்திருக்கிறேன்.” என ரவீந்திர கிஷோர் சின்ஹா கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சகத்தின் பதில் என்ன?
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பாரடைஸ் ஆவணங்களில் உள்ளதாக சில இந்தியர்களின் பெயர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) இணையதளத்தில் இன்னும் பெயர்கள் வெளியிடப்படவில்லை. பாரடைஸ் ஆவணங்கள் பற்றி உடனடி நடவடிக்கை எடுக்க, வருமானவரித் துறையின் விசாரணை அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
வெளிநாடு முதலீடு குறித்த பல வழக்குகள் ஏற்கனவே விரைவாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் தகவல் கிடைத்தவுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘பாரடைஸ்’ ஆவணங்கள் என்றால் என்ன?
மிகப்பெரிய அளவிலான வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியது குறித்த தகவல்கள் ‘பாரடைஸ்’ பேப்பர்ஸ்’ எனும் பெயரில் கசியவிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், பிரபலங்கள், பெரு நிறுவனங்கள், பெருநிறுவன முதலாளிகள் மற்றும் வணிகர்களின் நிதி பரிமாற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் இவை.
1.34 கோடி ஆவணங்களை சுடூஸ்ச்சே ஜெய்டங் (Süddeutsche Zeitung) என்ற ஜெர்மன் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்களை, புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) உடன் சுடூஸ்ச்சே ஜெய்டங் பகிர்ந்துக் கொண்டுள்ளது.
67 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஊடகங்கள் இதில் அடங்கும். பிபிசி பனோரமா குழுவும் இதில் இணைந்துள்ளது. இந்த ஆவணங்களின் அடிப்படை ஆதரங்களைப் பற்றி பிபிசிக்கு தெரியாது.