உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று.
கடந்த 1958 ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7-வது மகனாக பிறந்த பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். வறுமையின் பிடியில் மாட்டிக் கொண்ட போதும் இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜாக்சன். பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை அவர் படைத்தார்.
11-வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இசையுலகில் கடந்த 1971 முதல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்த ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.
1972ல் ‘காட் டு தி தேர்’, 1979ல் ‘ஆப் தி வால்’, 1982ல் ‘திரில்லர்’, 1987ல் ‘பேட்’, 1991ல் ‘டேஞ்சரஸ்’ மற்றும் 1995ல் ‘ஹிஸ்டரி’ போன்ற ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் அதிக லாபத்தை ஈட்டியது. தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.
மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை. 1996-ல் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
வாழ்க்கையில் புகழ், பெயர், வெற்றி, தோல்வி, ஏளனம், என அனைத்தையும் கண்ட ஜாக்சன் திடீர் மாரடைப்பு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.