தயாரிப்பு: ரோமியோ பிக்சர்ஸ்
நடிகர்கள்: அம்மு அபிராமி, அபிராமி, ஆர். ஜே. விக்னேஷ் காந்த், போஸ் வெங்கட், ஜி. பி. முத்து மற்றும் புதுமுக இணையதள நட்சத்திரங்கள்.
இயக்கம்: ராஜ்மோகன்
மதிப்பீடு: 2.5/5
யூட்யூப் தளத்தில் அறிமுகமாகி பிரபலமான முகங்கள் ஒன்றிணைந்து வெள்ளித்திரையில் தோன்றுவதால் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு சரியானதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இன்றைய நடைமுறையில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சினைகள்… அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான உறவு பாடசாலையில் பயிலும் சக மாணவர்களுக்கு இடையேயான நட்புறவு… இளைய தலைமுறையினரை ஆக்கிரமித்து இருக்கும் இணையம் என பல விடயங்களை பற்றி இப்படம் பேசியிருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களை கவரக்கூடும்.
தனியார் பாடசாலை ஒன்றில் பயிலும் இரு மாணவ குழுக்களிடையே வகுப்பறையில் இறுதி இருக்கையை கைப்பற்றுவது குறித்து வினோதமான முறையில்… மாணவர்கள் ரசிக்கும்படியான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாணவ குழுக்களில் யார் வெல்கிறார்கள்? என்பது ஒரு புறம் நடைபெறுகிறது. இந்த போட்டி ஒரு புள்ளியில் மாணவர்களை ஒன்றிணைக்கிறது. இந்த தருணத்தில் மாணவர்களிடையே தற்கொலை செய்து கொள்ளவிருக்கும் ஒரு மாணவன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. அந்த தற்கொலை செய்து கொள்ள விருப்பம் மாணவர் யார்? அவர்களை இந்த மாணவர்கள் கண்டறிந்து, தற்கொலையை தடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
திரைக்கதை முழுவதும் இணையதள நட்சத்திரங்கள் இடம் பெறுவதால் வெள்ளித்திரையில் அவர்கள் புதுமுக நடிகர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் தமிழ் திரையுலகத்தின் எழுதப்படாத மரபு படி நாயகியை காதலிக்கும் நாயகன் தான் ஹீரோ என்பதால்… இப்படத்தில் ஹயாசை ஹீரோவாக நினைத்துக் கொள்ளலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அறிமுகமாகி இருக்கும் மற்றொரு தனுஷ். அதாவது ஹயாசை பார்த்தவுடன் பிடிக்காது. பார்க்க பார்க்க பிடிக்கலாம். அவர் நடனமாடுகிறார். அம்மு அபிராமியே காதலிக்கிறார். சக மாணவர்களை அடிக்கிறார். எல்லாம் சரி… ஆனால் நடிப்புதான் வரமாட்டேன் என்கிறது. இருப்பினும் அம்மு அபிராமி- அயாஸ் சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் நச். அதிலும் ‘நிலா கையில் நிலா..’ ரசனைக்குரியது.
மாணவ குழுக்களில் ‘முத்துன கத்திரிக்கா’வாக தோன்றி, ‘பார்வையாளர்களிடத்தில் சிரிப்பை வரவழைக்கிறேன் பார்’ என்று ‘தம்’ கட்டி பேசி, கடைசியில் எதையும் சாதிக்காமல் கடந்து போகிறார் ஆர். ஜே. விக்னேஷ் காந்த்.
‘விருமாண்டி’ புகழ் அபிராமி மீண்டும் திரையில் தோன்றினாலும், அவருடைய கதாபாத்திரத்தையும் இயக்குநர் முழுமையாக எழுதவில்லை. அவர், ‘மாணவ மாணவிகள் தங்களது நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்கள் முக்கியம்’ என்று கூறுவது பொருத்தமாக இல்லை. ஆனால் வாழ்க்கையின் பொருளை உணர்த்துவதற்காக ஜி.பி. முத்துவை வைத்து ஒரு கதையை மேடையில் சொல்ல வைத்தது சிறப்பு.
முதல் பாதி 2K கிட்ஸ் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இருந்தாலும்.., வேறு வயதுள்ள பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது. வகுப்பறை.. மாணவர்கள் அலப்பறை.. என தொடர்ந்து காட்சிகள் வருவதால் தொய்வு தருகிறது. இரண்டாம் பாதியில் தற்கொலை செய்து கொள்ளவிருக்கும் மாணவன் யார்? என்பதனை சக மாணவர்கள் கண்டுபிடிப்பதில் இருக்க வேண்டிய விறுவிறுப்பு இல்லை. உச்சகட்ட காட்சி அனைவரும் எளிதில் யூகித்த வகையில் இருப்பதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இயக்குநர் ராஜ்மோகன் சில இடங்களில் ‘அட்வைஸ் சமுத்திரகனி’யாக மாறி இருப்பதால் எந்த அதிர்வையும் பார்வையாளர்களிடத்தில் உண்டாக்கவில்லை.
‘பாபா பிளாக் ஷீப்’ – குறைவான பெறுபேறுடன் சித்தி பெற்ற லாஸ்ட் பென்ச்.