நாட்டின் சமாதானத்தைச் சீர்குழைத்தல், அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரமும், பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேசப் பயங்கரவாதத்தின் விளைவாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புத் தரப்பினர், மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும், இதனால், பலரைச் சட்டத்தின் முன் கொண்டுவந்துள்ளதாகவும், இதனால், நாட்டின் அச்சுறுத்தலான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு, நேற்று (13) விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டால், இந்த நாடு பலவீனமடையுமென்றும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அது, பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளுக்குத் தடையாக அமையுமென்றும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிற்சில இடங்களில் குழப்பங்களை விளைவிக்கவும் அமைதியைச் சீர்குழைக்கவும், சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், இதனால், பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, அக்குழுக்களின் நோக்கமென்றும், இவ்வாறான நிலைமைகளை, பாதுகாப்புத் தரப்பினர் கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்த பிரதமர், அதனால், சமாதானத்தைப் பேணுவதற்காக, பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு, பொதுமக்களாகிய அனைவரும், தத்தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.