பாதாள உலக குற்றச் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்ட விசேட 20 குழுக்களினால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் , மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவுகளைச் சேர்ந்த 20 விசேட குழுக்களினாலே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர்களால் களுத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எலுவில மற்றும் மோதரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 43 வயதுடையவர்களாவர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 1,590 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 9 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் முல்லேரியா பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.