தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தற்போது தயாரித்து, இயக்கி வரும் படம் பாண்டிமுனி. இதில் ஷாக்கி ஷெராப் அகோரியாக நடிக்கிறார். அவருடன் நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இதில் 400 பேர் அகோரி வேடம் தரித்து நடித்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரிராஜா கூறியதாவது:
திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. 5 ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.
அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது. கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம். என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது. என்றார் கஸ்தூரிராஜா.