சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், வீர வரலாற்றையும் ‘பொன்னியின் செல்வன்’ மூலம் கண்டு ரசித்த தமிழர்கள், பாண்டிய மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும் ‘யாத்திசை’ எனும் சரித்திர திரைப்படத்தையும் காண காத்திருக்கிறார்கள்.
இந்த தருணத்தில் ‘யாத்திசை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகத்தின் நட்சத்திர பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘யாத்திசை’. இந்தத் திரைப்படத்தில் சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சக்கரவர்த்தி, செம்மலர் அன்னம், சுபத்ரா ,சமர், வைதேகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.
தொல் தமிழ் குடிகளான எயினர்களின் வீரம் செறிந்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் ‘யாத்திசை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும், அவர்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பின்பற்றிய உத்தி குறித்தும் இப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால்… ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
ஏப்ரல் 28 ஆம் திகதியன்று சோழர்களின் வீர வரலாற்றை மையப்படுத்தி தயாரான பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக தமிழகத்தை ஆண்ட மற்றொரு வம்சமான பாண்டிய வம்சத்தினை மையப்படுத்தி ‘யாத்திசை’ படம் தயாராகி, எதிர் வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று வெளியாகவிருப்பதால் பெரும் போட்டி ஏற்படும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.