இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டிகளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடரும் வெப்பமான காலநிலையை பொருட்படுத்தாது சில பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை தொடரும் என்பதை கருத்திற் கொண்டு விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெப்பமான காலநிலை
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்த போதிலும் இதனை பொருட்படுத்தாது பல பாடசாலை செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் காலநிலை காரணமாக தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அதிக வெளிப்புற செயற்பாடுகளால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோர்களும் இவ்வாறானதொரு காலநிலையில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
வெளிப்புற செயற்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறு வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் இல்ல விளையாட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் சுற்றறிக்கை, பாடசாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.