இங்கிலாந்து அணி 17 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளது.
இந்த விஜயத்தின்போது 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இங்கலாந்து எதிர்த்தாடவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி; கராச்சியில் இன்னும் 3 மணி நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ராவல்பிண்டியில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறுதல் வெற்றியீட்டிய பின்னர் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த தொடரானது இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கக்கூடும் என ஆரம்ப வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் மீது 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் 2005இலேயே பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக விஜயம் செய்திருந்தது.
அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தானுக்கு செல்வதை இங்கிலாந்து தவிர்த்து வந்தது. நான்கு வருடங்கள் கழித்து 2009இல் இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்த்து வந்தன.
2019ஆம் ஆண்டு தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி அங்கு சென்று சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய பின்னரே மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருவதாலும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருவதாலும் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி விஜயம் செய்திருப்பது ஒன்றும் புதினம் அல்ல.
இங்கிலாந்து இந்த வருடம் விளையாடியுள்ள 11 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4இல் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் 7 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றிபெற்றது.
கடைசியாக நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையிடம் 2 தடவைகள் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு இங்கிலாந்துடனான தொடரில் முயற்சிக்கவுள்ளது.
இங்கிலாந்து 2 விளையாடியுள்ள 159 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 79 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் 68இல் தோல்வி அடைந்துள்ளது. சமநிலையில் முடிவுற்ற இரண்டு போட்டிகளில் சுப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது. 5 போட்டிகளில் முடிவுகிட்டவில்லை.
பாகிஸ்தான் விளையாடிய 196 போட்டிகளில் 120 இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 68இல் தோல்வி அடைந்துள்ளது. சமநிலையில் முடிவடைந்த 3 போட்டிகளில் சுப்பர் ஓவரில் ஒரு வெற்றியையும் 2 தோல்விகளையும் தழுவியது. 5 போட்டிகளில் முடிவுகாணப்படவில்லை.
இங்கிலாந்தும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று 21 தடவைகள் சந்தித்துக்கொண்டபோது இங்கிலாந்து 13இல் வெற்றிபெற்றதுடன் பாகிஸ்தான் 6இல் வெற்றிபெற்றது.
எவ்வாறாயினும் இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் பாகிஸ்தானுக்கு அனுகூலமான முடிவுகள் கிட்டும் என எதிர்பார்க்கலாம்.
அணிகள்
பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), ஷான மசூத், மொஹமத் ஹாரிஸ், இப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஆசிவ் அலி, மொஹமத் நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், மொஹமத் ஹஸ்நய்ன்.
இங்கிலாந்து: அலெக்ஸ் ஹேல்ஸ். பில் சோல்ட், டேவிட் மாலன், ஹெரி ப்றூக், மொயீன் அலி (தலைவர்). வில் ஜெக்ஸ், சாம் கரன், டேவிட் வில்லி, ஆதில் ராஷித், ஒலி ஸ்டோன், ரிச்சர்ட் க்லீசன்.