பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சத்திர சிகிச்சையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், இன்சமாமின் உடல் நிலையும் தற்சமயம் நல்ல நிலையில் உள்ளது.
இன்சமாம் கடந்த மூன்று நாட்களாக நெஞ்சுவலியினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக திங்கட்கிழமை இன்சமாம் பரிசோதனைகள் கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் அவருக்கு நேற்று மாலை வெற்றிகரமாக ஆஞ்சியோபிளாஸ்டி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கிரிக்கெட் தொடர்பான முன்னணி செய்திச் சேவையான ‘ESPN’ தெரிவித்துள்ளது.
51 வயதான இன்சமாம், பாகிஸ்தான் அணிக்காக 375 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,701 ஓட்டங்களையும் 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
மிகவும் வெற்றிகரமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர்களுள் அவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
2007 இல் இன்சமாம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு பாகிஸ்தான் அணியில் ஒரு துடுப்பாட்ட ஆலோசகராகவும், 2016 – 2019 வரை அணியின் தலைமை தேர்வாளராகவும் பல பதவிகளை வகித்தார்.
அவர் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
‘ஆஞ்சியோபிளாஸ்டி’ என்பது இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நாளத்தின் ஊடாக (நாளத்தின் உட்புறம்) செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சையாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]