பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் வரலாம் என பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுத்தொடரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டீ டுவென்ட்டி போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை அணி விபரம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மேற்கோள்காட்டி இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் குறித்த தொடரில் பங்குபற்றுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்த வேளையில் இளம் வீரர்களை உள்ளடக்கியதாக இலங்கை அணி தெரிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும் பாகிஸ்தான் செல்லும் குறித்த அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் வரலாம் என்ற தகவல் கிடைத்திருப்பதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட தீர்மானித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே இலங்கையிலுருந்து பாகிஸ்தான் சென்ற குழு அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை றுதிப்படுத்திய பின்னரே குறித்த சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.